#MERSAL #மெர்சல் - ஒரு பார்வை

'மெர்சல்' திரைப்படம் வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. சர்ச்சைகளுக்கும் வசூல் சாதனைகளுக்கும் சற்றும் குறைவில்லை. ஒட்டு மொத்த திரைப்படத்தை விட இறுதிக்காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் மெர்சலை எங்கோ கொண்டு சென்று நிறுத்திவிட்டன. அந்தக் காட்சியில் விஜய் தெரிவிக்கும் புள்ளிவிவரங்கள் சரியா தவறா என்பது முதல் இந்த வசனத்தை அவர் எப்படிப் பேசலாம் என்பது வரை பல சர்ச்சைகள் படத்தில். மெர்சல் என்ற பெயர் குறித்தே பல சர்ச்சைகள்!



வழக்கமாக ஒரு திரைப்படத்தைப் பற்றிப் பேசும் போது அதன் வசூலைப் பற்றித்தான் பேசுவார்கள். எங்கெங்கே எத்தனை கோடிகளை அள்ளியது என்பது தான் ஊர் முழுக்கப் பேச்சாக இருக்கும். ஆனால் மெர்சலைப் பொறுத்தவரை கிளம்பிய சர்ச்சைகள் தான் முதன்மைப் பேசு பொருளாக இருக்கிறது. மெர்சல் சர்ச்சைகள் மாநில அளவில் வெற்றிபெற வேண்டிய திரைப்படத்தை தேசிய அளவிலும் ஏன் உலக அளவில் கொண்டு சென்று வெற்றிபெற வைத்துக் கொண்டிருக்கின்றன. இது வசூலிலும் கூட சாதனை படைக்க பேருதவியாக அமைந்துவிட்டது.

நீண்ட காலத்துக்குப் பின் நடிகர் விஜய்யின் இயல்பான சிறந்த நடிப்பை மெர்சலில் காண முடிகிறது. சிவகாசி போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு விஜய்யின் இயல்பான நடிப்பைக் காண முடியவில்லை. முன்னணி கதாநாயகனாக்குகிறேன் என்ற பெயரில் சில இயக்குனர்கள் விஜய்யை மெனக்கெட்டு நடிக்க வைத்து சிறப்பான நடிப்பை காணாமலாக்கி வைத்திருந்தார்கள். விஜய்க்கு இயல்பாகவே சிறந்த நடிப்புத் திறன் வாய்த்திருக்கிறது. அதனை கடந்த கால இயக்குனர்கள் சரியாக புரிந்து கொண்டு அவரைக் கையாண்டிருந்தார்கள். ஆனால் இக்கால இயக்குனர்கள் அவரைக் கையாளத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் அட்லீ மெர்சலில் சாதித்திருக்கிறார்.



இதுவெல்லாம் சாத்தியமா என்கிற ஆராய்ச்சிகளைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் விறுவிறுப்பான திரைக்கதை. ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகனை இருக்கையை விட்டு நகரவிடவில்லை. வடிவேலுவுக்கு சிறப்பான கதாபாத்திரம். ஆனால் நகைச்சுவையைத்தான் காணவில்லை. 'சிலாக்கிடும்மா' என்கிற வடிவேலுவின் வசனம் இப்போது வெகு பிரபலம். அர்த்தம்தான் என்னவென்று தெரியவில்லை. கதாநாயகன் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார் என்பதைப் பற்றியெல்லாம் ஆயிரம் விமர்சனங்கள் வந்துவிட்டன. ஆதலால் நாம் அவற்றைப் பற்றி பேச அவசியமில்லை.

இதுவரை இளைய தளபதியாக இருந்த விஜய் மெர்சலில் இருந்து தளபதியாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கதாநாயகி கதாநாயகன் விஜய்யை பல இடங்களில் தளபதி... தளபதி.... என அழைத்து இதைப் பல இடங்களில் நமக்கு நினைவூட்டுகிறார். விஜய் மூன்று வேடங்களில் கலக்கியிருக்கிறார். விஜய்யின் சிறப்பான நடிப்பு விமர்சனங்களையெல்லாம் தாண்டி திரைப்படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. விஜய்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மெர்சல் ஜல்லிக்கட்டு அல்லது தமிழர் பாரம்பரியம் சார்ந்த திரைப்படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அது மருத்துவத்துறை சார்ந்த திரைப்படமாக அமைந்துவிட்டது. மருத்துவத்துறை குறித்து மெர்சல் வசனங்களில் உள்ள புள்ளி விவரங்களில் சில தவறுகள் உள்ளன என்பது உண்மையே. இது மக்கள் மத்தியில் தவறான புரிதலை உண்டு பண்ணும். எனவே திரைப்படங்கள் புள்ளிவிவரங்களை சரியான முறையில் கையாள வேண்டியது அவசியம். மற்றபடி மெர்சல் அருமை.

ஒட்டுமொத்தத்தில் மெர்சல் - மிரட்டல்!

Comments